Monday, March 5, 2018

கொல்வதும், கொல்லப்படுவதும் ராவணின் பிள்ளைகள்..!நேர்மைக்கு பெயர் போன, நல்லாட்சியின் நாயகனாக கருதப்பட்ட ஒரு தலைவர் திரிபுராவில் ஆட்சி இழக்க வேண்டி வந்தது. இந்நிலையில், வெறும் வெத்து வேட்டுகளாய், சுயநலமிகளாய், குறுகிய மனநிலையில் மக்களை வழிநடத்தும் தமிழக தலைவர்களை வெல்ல சங்பரிவார்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் தமிழகத்திலும் ஏற்கனவே வெற்றிப் பெற்றதற்கு அடையாளம்தான் நடப்பு பழனிச்சாமி அண்ட் பன்னீர் செல்வம் பிரதர்ஸ் ஆட்சி. ~இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

மத துவேஷங்களைத் தூண்டி வெறுப்பு அரசியலை இந்திய உப கண்டம் முழுக்க கொளுத்திவிட்ட, பாசிஸ சக்திகள் பாபரி மஸ்ஜிதை தரை மட்டமாக்கிய சூழல் அது. வெறும் சொற்ப எண்ணிக்கையிலான பாஜக சங்பரிவார் குழுவினர் அதைத் தாண்டி மைய அரசின் அதிகாரத்தைக் கைப்பற்றிய வேளை.

இத்தகைய சூழலில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய குழுத் தலைவர்கள் ஆரம்பித்து மாநிலங்கள் குறுந்தலைவர்கள்வரை உச்சரித்த அந்த சொல்லாடல் மறக்க முடியாமல் இன்னும் மனதில் பதிந்துள்ளது. “அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரிந்து அணைவது போல சங்பரிவார் பாசிஸம் விரைவில் மண் கவ்வும்!” என்ற சொல்லாடல்தான் அது அதாவது சங்பரிவார் கைப்பற்றிய இந்திய அதிகாரத்தின் உச்சக் காலக்கட்டமாக 90-களின் பிற்பகுதிகளை ஜமாஅத்தின் தலைவர்கள் கணித்திருந்தனர். அந்த கருத்தியலை அப்போது, என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியிலும் ஜமாஅத் பரப்பியது. வெறும், பொய்யும், புரட்டும், வெறுப்பு அரசியலும் மக்களிடையே நிலைக்கொள்ளாது. இந்த அண்டசாரம் சத்தியத்தின் அடிப்படையில்தான் இயங்கிவருகிறது என்று தனது தொண்டர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தது ஜமாஅத்.

ஜமாஅத்தின் இந்தக் கருத்தியலுக்கு அப்பாலும் ஏறக்குறைய  20 ஆண்டுகள் கடந்தும் பாசிஸ சங்பரிவார் அமைப்பு தனது தேர்தல் களத்தில் வெற்றி முகத்திலிருந்து திரும்புவதாய் இல்லை. நேர்மைக்கு பெயர் போன, நல்லாட்சியின் நாயகனாக கருதப்பட்ட ஒரு தலைவர் திரிபுராவில் ஆட்சி இழக்க வேண்டி வந்தது. இந்நிலையில், வெறும் வெத்து வேட்டுகளாய், சுயநலமிகளாய், குறுகிய மனநிலையில் மக்களை வழிநடத்தும் தமிழக தலைவர்களை வெல்ல சங்பரிவார்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் தமிழகத்திலும் ஏற்கனவே வெற்றிப் பெற்றதற்கு அடையாளம்தான் நடப்பு பழனிச்சாமி அண்ட் பன்னீர் செல்வம் பிரதர்ஸ் ஆட்சி.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல்களில் மட்டும் ஏறத்தாழ 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பா.ஜ.கவுக்குப் பணியாற்றி இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்று மூத்த பத்திரிகையாளர் கிஷாலாய் பட்டாச்சாரியா கூறியது நினைவுகூறத்தக்கது. இந்தக் கூற்றை தற்போது வெளியாகியுள்ள பிரசாந்த் ஜாவின்  ‘How BJP Wins’ – என்ற புத்தகமும் உறுதிப்படுத்துகிறது.

ஒற்றை தேசியத்தை பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டர்கள் அழுத்தமாக பேசினாலும், தேர்தல் என்று வரும் போது இந்த இறுக்கத்தை தளர்த்தி எப்போதும் உள்ளூர் முகமூடியை அணிந்துக் கொள்வதில் மிகத் தெளிவாக இருக்கிறது பாஜக. 

அதனால்தான், தேசிய அளவில் பசுபாதுகாப்பு - ‘கெளரக்‌ஷா’ என்று பேசுபவர்கள், வட கிழக்கு மாநில தேர்தல்கள் என்று வரும் போது, “நாங்கள் மாட்டுக்கறி உணவிற்கு எதிரானவர்கள் இல்லை!” - என்று பரப்புரை செய்தார்கள். 

அசாம் தேர்தலின் போதும் சரி, மணிப்பூர் தேர்தலின் போதும் சரி, அந்த மாநிலங்கள் குறித்து சங்பரிவார் சக்தி, விரிவாக ஆய்வு செய்து, அம்மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்தது. மக்களின் மனநிலைக்கேற்ப முகமூடியை தரித்துக் கொண்டு அவற்றை தேர்தல் பிரச்சாரங்களில் பிரதிபலித்தது.

மணிப்பூர் தேர்தலில், மாநில அரசுக்கு எதிரான மனநிலை மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் ஆகியவற்றை முன்னிறுத்திதான் வாக்கு கோரியது பாஜக. அந்த மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆயுதப்படை சிறப்பு சட்டத்துக்கு எதிரான மனநிலையில்தான் மக்கள் அனைவரும் இருந்தார்கள். இது சங்பரிவார் சக்திக்கு தெரியாததல்ல, இது, தேர்தலில் பெரும் பிரச்னையாக உருவெடுக்கும் என்று அஞ்சிய அவ்வமைப்பு, அதற்கு மாற்றான திட்டமொற்றை விரிவான ஆய்வில் கண்டறிந்தது.

மணிப்பூர் மக்கள், அந்த மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் 'போலி மோதல்கள்' (என்கவுண்டர்) சம்பவங்கள் மீதுதான் முதல்நிலை, கோபத்தில் இருந்தார்கள். ஆயுதப்படை சிறப்பு சட்டம் அடுத்த நிலையில் இருந்தது. அதனால், என்கவுண்டர் பிரச்சனையை தேர்தலில் பிரதானமாக்க முடிவெடுத்தது சங்பரிவார் குழுமம்.  அதுவரை அங்கு இயங்கி வந்த மனித உரிமைக்  குழுக்களுடன் கரைந்து, அவ்வமைப்புகளின் தலைமை முகமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது.

2015-ல், சொந்த காரணங்களுக்காக குஜராத் செல்ல வேண்டி வந்தது. அந்த பயணத்தின் ஊடே சிங்கங்களின் புகழ்பெற்ற திறந்தவெளி சரணாலயமான ‘சாஸன் கிர்’ (Sasan Gir) வனப்பகுதிக்கு செல்ல ஒரு வாய்ப்பும் கிடைத்தது.

காரோட்டியாக வந்தவர் அஹ்மதாபாத் நகரைச் சேர்ந்தவர். இளைஞர். அந்த மாநிலத்தில், பாஜக வெல்ல முடியாத அரசியல் சக்தியாக இருப்பதன் காரணம் என்ன என்று அவரிடம் நான் கேட்டதற்கு, அவர் எளிமையாக சொன்னது இது: “மது, மாது, பணம்!”

இந்திய உபகண்டத்தை வர்ணாசிரம சிந்தாந்தத்தால் தூய்மைப் படுத்த நினைக்கும் சங்பரிவார் குழு கீழ்த்தரமான அரசியல் முறைகளை கையாள்வதாக அந்த அஹ்மதாபாத் இளைஞர் சொன்னதை அப்போது என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், தற்போது வடக்கிழக்கு மாநிலங்களில் சங்பரிவார் சக்திகளும், அதன் அரசியல் தளமான பாஜக.வும், நடந்து கொண்ட முறை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற எல்லா ராஜதந்திரங்களும் சங்பரிவார் சித்தாந்தத்தில் ஹலால் (கூடும்) ஆக்கப்படும் என்கின்றன நிகழ்வுகள்.

மணிப்பூர் பழங்குடிகளிடம் பாஜக. வாக்கு சேகரித்த விதம் மிகவும் மட்டகரமானது. பாஜக கட்சியால் முன்னிறுத்தப்பட்ட ஆதிக்குடி, கிறிஸ்துவ வேட்பாளர்கள், மலைகளில் வாழும் கிறிஸ்துவ மக்களிடம் BJP என்றால் 'Bharatiya Jesus Party' என்று கூறி வாக்கு கேட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. முஸ்லிம்களின் ஹஜ் மானியத்தை நிறுத்திய கையோடு, தற்போதைய தேர்தல் பிரச்சார பரப்புரையில், ‘ஜெருசலேம்’ பயணத்தக்கான மானியம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசியது இதே பாஜக.தான்.

ஏறத்தாழ இதே பாணியைதான் திரிபுராவிலும் சங்பரிவார் குழுக்கள் பின்பற்றின. பாதிரியார் ஸ்டெயினையும் அவரது குடும்பத்தாரையும்  உயிரோடு எரித்த இந்த சிந்தாந்த குழுமம் அங்கு தன்னை கிறிஸ்துவர்களுக்கு நெருக்கமான கட்சியாக காட்டிக் கொண்டது. மற்ற விஷயங்களை எல்லாம் விட அம்மாநிலத்தில் பிரதானமாக இருந்த வேலைவாய்ப்பின்மையை முன்னிறுத்தி வாக்கு கேட்டது.

“வெல். வெல்ல முடியாத சூழலில் உள்வாங்கு!” - இதுதான் சங்பரிவாரின் 'ஆக்டோபஸ்' அரசியல் அதிகாரத்துக்கான சூத்திரம்.

அஸ்ஸாமின் முடிசூடாத மன்னராக மக்கள் மனதில் கோலோச்சியவர் காங்கிரஸின் ஹிமான்தா பிஸ்வா சர்மா. அவரைக் கவர்ந்து கொண்ட சங்பரிவார் குழுமம் அந்த மக்கள் செல்வாக்கை பா.ஜ.கவின் அதிகார வெற்றியாக மாற்றிக் கொண்டது. இதே வெற்றிதான் தற்போது திரிபுராவிலும் கையாளப்பட்டது. பாஜக வின் வெற்றி வேட்பாளர்களில் அதிக எண்ணிக்கைக் கொண்வர்கள் முன்னாள் காங்கிரஸ் பிரமுகர்கள்தான்.

பீகார் தேர்தல் சூழலில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத் ஆர்கனைசர் இதழில் இடஒதுக்கீடுக்கு எதிராக அளித்த நேர்காணல் பாஜக வின் தோல்வியாக அந்த மாநில தேர்தல்களில் பிரதிபலித்ததை சங்பரிவார் சக்திகள் மறக்கவில்லை. அந்த அனுபவத்தை பாடமாக எடுத்துக் கொண்டவர்கள், ‘எதைப் பேசக்கூடாது’ என்பதில் தெளிவாக இருந்தார்கள்.

சரியான திட்டமிடல், பொய்ப்புனைவுகள், தந்திரம், இவை அனைத்தையும் தாண்டி, சங்பரிவார் குழுக்களில் உள்ள, ‘வர்ணாசிரம மூளைச்’ சலவை செய்யப்பட்டுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் அளவற்ற அர்ப்பணம் இவைதான் பாஜகவின் தொடர் வெற்றிக்கு காரணங்கள் என்கின்றன தரவுகள்.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம், நன்கு திட்டமிடப்பட்டு, இந்திய மக்களின் மனங்களில் சங்பரிவார் குழுமம் பல்வேறு நாமங்களில் செயல்பட்டு, மெல்ல மெல்ல நச்சேற்றிய வர்ணாசிர திட்டங்களின் அறுவடைக்காலம் இது.

ஒரு புரிதலுக்காக சொல்ல வேண்டுமென்றால் ராவணன் பிள்ளைகளுக்கு எதிரான கலகம் இது.

இந்த வர்ணாசிரம போர்க்களத்தில், ராமன் தரப்பில், செறிவூட்டப்பட்ட, ராவணன் பிள்ளைகள் அம்புகள் ஏந்தி நிற்கிறார்கள். மறுபுறமோ, நிராயுதபானியாக நிற்கும், ராவணன் பிள்ளைகளைக் கொல்லும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த வியூகம் விந்தனையானது. கொல்வதும், கொல்லப்படுவதும் ராவணன் பிள்ளைகள்..!

ஆகப் பெரும் அறிவாயுதமும், அதை மக்கள் மனதில் கொண்டு சேர்க்கும் சுயநலமற்ற தூயத் தலைவர்களும்தான் இன்றைய தேவை.

எப்போதும், போர்க்களம் என்ற மனமாச்சரியங்களும், வெறுப்பரசியலும், பதட்டத்தை அதிகரித்து மன அமைதியை கொன்றுவிடும். மக்களின் சகஜமான வாழ்வியலை நாசமாக்கிவிடும். நாட்டு முன்னேற்றத்தை ஸ்தம்பிக்கச் செய்துவிடும். இந்த இழப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும், ராவணன் பிள்ளைகளின் பெரும் பொறுப்பாகும்.

ஆக, ராமனின் அம்புகள் கூர்த்தீட்டப்படுகின்றன. குத்தீட்டிகள் பதம் பார்க்க இருக்கின்றன.

எச்சரிக்கை மக்களே..!
Tuesday, February 20, 2018

மராட்டிய மன்னர் சிவாஜி முஸ்லிம்களுக்கு எதிரானவரா?''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''


பிரபல நூலாசிரியரும், சிந்தனை யாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ராம் புன்யாணி பிபிசி-தமிழ் இணையத்தில் எழுதிய கட்டுரை இது. வலுக்கட்டாயமாக, சிவாஜிக்கு இந்துத்துவ வர்ணம் பூசி ஒரு தரப்பு நாட்டு மக்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை நடத்த எத்தனிக்கும் பாசிசவாதிகளின் முகமூடியை கிழிக்கும் எழுத்துக்கள் இவை - இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் நினைவில் நிற்கும் மிகப் பிரபலமான மன்னர் சிவாஜி. மும்பையின் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்துக்கு சிவாஜி பெயர் சூட்டப்பட்டிருப்பது மட்டுமல்ல, அரபிக் கடலில் அவரது பிரம்மாண்டமான சிலை ஒன்றை நிறுவவும் திட்டமும் உள்ளது.

இரண்டு அரசியல் நோக்குகள் சிவாஜியை இருவேறு வழிகளில் நினைவுகூறுகின்றன. சிலர் அவரை பிராமணர்களையும், பசுக்களையும் காத்தவராகவும், வேறு சிலர் அவரை மக்கள் நலன் பேணிய மன்னராகவும் பார்க்கின்றனர்.

அதே நேரத்தில் அவரை முஸ்லிம் விரோதியாகக் கட்டமைக்கும் ஆழமான கருத்தோட்டம் ஒன்றும் நடந்துவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விநாயகர் சதுர்த்தியின்போது மும்பையில் அமைக்கப்பட்ட ஒரு அலங்கார வளைவில் மிராஜ்-சங்லி யுகத்தைச் சேர்ந்த அஃப்சல்கானை சிவாஜி வெட்டுவதைப் போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்தக் காட்சி அடங்கிய துண்டறிக்கை மகாராஷ்டிரா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. இதன் விளைவாக, இந்த வளைவு அமைக்கப்பட்டிருந்த பகுதியில் வகுப்பு மோதலும் நடந்தது. சிவாஜி என்ற இந்து மன்னர் அஃப்சல்கான் என்ற முஸ்லிம் மன்னரை கொன்றதாகவே பார்வை இருக்கிறது.

பிரதப்காவில் உள்ள அஃப்சல் கானின் கல்லறையை இடிப்பதற்கான நடவடிக்கைகளும் இந்து வலதுசாரி செயல்பாட்டாளர்களால் எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த கல்லறை, சிவாஜியால் உருவாக்கப்பட்டது என்ற தகவல் வெளியான பிறகே, இந்த செயல் நிறுத்தப்பட்டது.

சிவாஜி, அனைத்து மதங்களையும் மதித்த மன்னர். இது அவரின் அனைத்து கொள்கைகளிலும் பிரதிபலித்ததோடு, அவரின் நிர்வாகம் மற்றும் ராணுவம் அதற்கு ஒரு ஒருங்கிணைந்த சான்றாக உள்ளது.

மன்னர் சிவாஜியின் தாத்தாவான மலோஜிராவோ போஷ்லே குறித்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. அவர், சுஃபி ஞானியான ஷா ஷரிஃபை சிறப்பிக்கும் விதமாக, தனது இரு மகன்களுக்கும் ஷாஜி மற்றும் ஷரிஃப்ஜி என்று பெயரிட்டார்.

உள்ளூர் இந்து மன்னர்களுடன் சண்டையிட்ட சிவாஜி, ஔரங்கசிப்பையும் எதிர்த்தார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஔரங்கசிப்பின் ராணுவத்தை முன்னின்று வழிநடத்தியவர், ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த ராஜா ஜெய்சிங் என்பவர். இவர், ஔரங்கசிப்பின் அமைச்சரவையில் பெரும்பதவி வகித்தார்.

சிவாஜி மன்னர், மனிதாபிமான அடிப்படையிலான கொள்கைகளை நிர்வாகத்திற்காக அவர் எடுத்தார். அவை எந்த மதத்தையும் சார்ந்திருக்கவில்லை. அவரின் ராணுவத்திற்கு, கடற்படைக்கும் ஆட்களை சேர்க்கும் போதும், அதில் மதம் ஒரு பகுதியாக இருக்கவில்லை. சிவாஜியின் கடற்படையின் தலைமை தளபதியாக இருந்தவர் சித்தி சம்பால். என்பதோடு அவரின் ராணுவத்தில் மூன்றில் ஒரு பங்கினர் முஸ்லிம்களாகவே இருந்தனர். அதேபோல, சிவாஜியின் கடற்படையில், முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தனர்.

ஆக்ரா கோட்டையில் சிவாஜி கைது செய்யப்பட்டபோது கூட, அவரின் தப்பிக்கும் திட்டத்திற்கு உதவுவோராக அவர் மனதார நம்பியவர்களில் ஒருவர் முஸ்லிம்தான். அவருடைய  பெயர் மதாரி மெஹ்தர்.

சிவாஜியின் மிக முக்கிய விவகாரங்களுக்கான உதவியாளாராக இருந்தவர், மௌலானா ஹைதர் அலி. அவரின், பீரங்கிப்படையின் தலைவராக இருந்தவர் இப்ராஹிம் கார்டி.

பிற மதங்களின் மீது சிவாஜிக்கு இருந்த மரியாதை தெளிவாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. `ஹஸ்ரத் பாபா யகுப் பஹுத் தோர்வாலே` போன்ற துறவிகளை அவர் மிகவும் மதித்தார். அவருக்கு வாழ்நாளுக்கான உதவித்தொகையை வழங்கினார். இதேபோல, குஜராத்தில் தாக்குதலுக்கு உள்ளான தேவாலயத்தின் பாதிரியார் அம்ரூஸிற்கு அவர் உதவினார்.

தனது தினசரி வழிபாட்டுக்கு ஜகதீஷ்வர் கோவிலை கட்டியதுபோலவே, முஸ்லிம்களின் வழிபாட்டுக்காகவும், தனது அரண்மனைக்கு எதிரே ஒரு மசூதியையும் அவர் தலைநகர் ரைகாத்தில் கட்டினார்.

முஸ்லிம் பெண்களும், குழந்தைகளும் ஒருகாலும், தவறாக நடத்தப்படக்கூடாது என தனது ராணுவத்தினருக்கு மிகவும் கண்டிப்பான கட்டளைகளை அளித்திருந்தார் சிவாஜி.

சிவாஜியின் அரசாட்சியில், தர்கா மற்றும் மசூதிகளுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டது. தனது படையினரின் கைகளில் எப்போது திருக்குரான் கிடைத்தாலும், அதை முறையாக ஒரு முஸ்லிமிடம் அவர்கள் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கட்டளையிட்டிருந்தார்.

பசீன் பகுதியில் நவாபின் மருமகளின் முன்பு, அவர் தலைகுனிந்து மரியாதை செய்த வரலாற்றுச் சம்பவம் பலரும் அறிந்ததே. அபகரிக்கப்பட்ட பொருட்களின் ஒரு பகுதியாக அப்பெண்ணும், சிவாஜி மன்னரின் முன்பு கொண்டு நிறுத்தப்பட்ட சம்பவம் அது. அப்போது, அப்பெண்ணின் முன் தலைகுனிந்து தமது செயலுக்கு மன்னிப்புக் கோரிய மன்னர் சிவாஜி, மீண்டும் அப்பெண்மணியை அவரது இல்லத்தில் பாதுகாப்புடன் கொண்டு சேர்க்குமாறு தனது வீரர்களுக்கு கட்டளையிட்டார்.

அஃப்சல் கானை கொன்ற சம்பவத்திலிருந்தும் பல செய்திகள் வெளிப்படுகின்றன.

அந்த காலத்தில், மன்னர் சிவாஜியுடன் பல ஆண்டுகளாக பகைமைக் கொண்டிருந்த ஆதில்ஷாஹியின் பிரதிநிதியாக இருந்தவர்தான் அஃப்சல்கான்.

சிவாஜியை தனது கூடாரத்திற்கு அழைத்து, அவரை கொல்வதற்காக அஃப்சல்கான் திட்டமிட்டது குறித்து, ருஸ்தாமே ஜமன் என்ற முஸ்லிம் மூலமாகவே சிவாஜி தெரிந்துகொண்டார். பாதுகாப்புக்காக, சிவாஜியிடம் இரும்பு நகங்களை தன்னுடன் கொண்டுவருமாறு அறிவுறுத்தியதும் அந்த முஸ்லிம்தான்.

அதேபோல, அஃப்சல்கானின் முக்கிய ஆலோசகராக இருந்தவர், கிருஷ்ணஜி பாஸ்கர் குல்கரி என்பவர் என்பதை மக்கள் மறந்துவிட்டனர்.

இந்த கிருஷ்ணஜி பாஸ்கர் குல்கரி சிவாஜிக்கு எதிராக வாளை ஏந்தியவர்.

மன்னர்களுக்கு இடையே பதவிக்காக இருந்த சண்டைகளை, வெள்ளையர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். தங்களின் எழுத்தாண்மையால், மக்களை மதரீதியாகப் பிளவுப்படுத்தியதால், வரலாறு மதப்பிரச்சனை என்ற திருப்புமுனையை சந்தித்தது.

உண்மையில், சிவாஜி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்` என்ற பார்வை அரசியல் நோக்கங்களுக்காகவே சித்தரிக்கப்பட்டது. இந்த பார்வையிலிருந்து பிரச்சனையை பேசும் பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன. `ஜான்தா ராஜா (எல்லாம் அறிந்த அரசர்)` என்ற நாடகத்தை புரந்தரா என்பவர் எழுதியிருந்தார், அது, மஹாராஷ்டிரா முழுவதும் பிரபலப்படுத்தப்பட்டது. அந்த நாடகம், சிவாஜியை முஸ்லிம்களுக்கு எதிரானவராக காட்டுகிறது.

இந்தப் புனைவுக்கு எதிராக, சரியான வரலாற்றை குறிப்பிட்டு வரலாற்று ஆய்வாளர் சர்தேசி, 'மராத்தியர்களின் புதிய சரித்திரம்` என்ற நூலை எழுதினார். அதில், சிவாஜி முஸ்லிம்களுக்கு எதிராகவே, அவர்கள் பின்பற்றும் சமயமான இஸ்லாத்துக்கு எதிராகவோ ஒருபோதும் நடந்ததில்லை என்று வரலாற்று உதாரணங்கள் மூலமாக நிறுவுகிறார். இவை எல்லாமே, சிவாஜி மன்னர் சமயங்களுக்கிடையிலான நல்லுறவை எப்படி கட்டிக் காத்தார் என்பதை வெளிப்படுத்துகின்றன.

உண்மையில், மன்னர் சிவாஜயின் அடிப்படை இலக்கு என்பது, முடிந்த அளவு பெரும் நிலப்பரப்பில் தனது ராஜியத்தை எப்படி விஸ்தரித்து நிறுவவேண்டும் என்பதாகவே இருந்தது. அப்படிப்பட்ட சிவாஜியை முஸ்லிம்களுக்கு எதிரானவராக சித்தரிப்பது என்பது உண்மைக்கு புறம்பானதாகும்.

(நன்றி: பிபிசி-தமிழ்)